தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு...! - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு...!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு...!

சென்னை,

கொரோனா நோய் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை கடந்த 27-ந்தேதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு, பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது. நோய் தொற்று பாதிப்பு இருந்துவரும் இந்த சூழ்நிலையிலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பட உள்ளன. பள்ளிகளைப் பொறுத்தவரையில், முதலில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது.

அந்தவகையில் இன்று திறக்கப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து மாணவர்களுக்கும் (100 சதவீதம்) நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்திருக்கிறது.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்கனவே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடி வகுப்புகளைதான் அதிகம் விரும்புவது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளை பார்க்கும்போது, ஆன்லைன் வகுப்பு என்பது கல்வி தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடந்து வருகிறது. சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் முயற்சியின் காரணமாக வாட்ஸ்-அப் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கல்வித் துறையின் உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப நேரடி வகுப்புகளை குறைத்து, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தவும் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில், முககவசம், சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு கழுவுவது போன்ற அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு கல்வித்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot