கல்லுாரி, பாலிடெக்னிக் இன்று திறப்பு ஆன்லைன் செமஸ்டர் தேர்வும் துவக்கம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

கல்லுாரி, பாலிடெக்னிக் இன்று திறப்பு ஆன்லைன் செமஸ்டர் தேர்வும் துவக்கம்

தமிழகம் முழுதும் கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, 'ஆன்லைன்' வழியில் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளதால், அனைத்து இன்ஜினியரிங், கலை, அறிவியல், சட்ட கல்லுாரிகள், வேளாண், மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படுகின்றன.

பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி மையங்கள், சிறப்பு பயிற்சி மையங்கள், வணிகவியல் பயிலகங்கள் உள்ளிட்டவையும் திறக்கப்படுகின்றன.

இன்ஜினியரிங் மாணவர்களை பொறுத்தவரை, நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்த பி.இ., - பி.டெக்., மாணவர்கள்; முதுநிலையில் எம்.பி.ஏ., - ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. ஒரே நேரத்தில், 100 சதவீத மாணவர்கள் கல்லுாரிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., - எம்.எஸ்சி., மற்றும் எம்.பில்., முதுநிலை பட்டப் படிப்பில் புதிதாக சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என, அண்ணா பல்கலை பதிவாளர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.

வழிகாட்டுதல்கள் இன்ஜினியரிங் முதலாம் செமஸ்டர் மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கும்; கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கும், இன்று முதல் ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வுகளை எழுதவும், விடைத்தாளை ஆன்லைன் வழியிலும், தபாலில் கல்லுாரிகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை, அண்ணா, பாரதியார், மதுரை காமராஜ் உள்ளிட்ட பல்கலைகள் தனித்தனியே மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் அறிவித்துள்ளன.

அண்ணா பல்கலையை பொறுத்தவரை, எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.ஆர்க்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு மட்டும், செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக கல்லுாரிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot