அரசு பள்ளியில் பெற்றோர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, March 21, 2022

அரசு பள்ளியில் பெற்றோர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

பொன்னை அடுத்த வள்ளிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வள்ளிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தவறாமல் கலந்து கொண்டு, குறைகளை தெரிவிக்கலாம் என தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார். எனவே, நேற்று நடந்த மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர் பலர் வந்திருந்தனர். பின்னர் அவர்கள், பள்ளியில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை ஆசிரியர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை என தெரிவித்து, அங்கிருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க | "பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள்" - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

இதனை சற்றும் எதிர்பாராத தலைமை ஆசிரியர், உடனடியாக மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பெற்றோர்கள் கூறுகையில், `கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி திறக்கப்படாமல் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால், இங்குள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லை. பள்ளி அருகே சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அதேபோல், இங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதும், கேட்டால் உள்ளூர் ரவுடிகளை வைத்து மிரட்டுவதுமாக உள்ளார். இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது என குற்றம்சாட்டினர்.

இதையும் படிக்க | பிற உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா?

இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot