மாவட்டந்தோறும் சிறப்புக்குழு; டியூஷன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, March 1, 2022

மாவட்டந்தோறும் சிறப்புக்குழு; டியூஷன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மாவட்டந்தோறும் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் டியூஷன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

டியூஷன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் ஈச்சங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை ராதா. தினசரி சுமார் 32 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் தனது இடமாறுதலை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: அரசுப் பள்ளிகளில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரே அதிகளவில் படிக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேசத்தின் முதுகெலும்பான இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்த ஆசிரியர்கள் தவறுவது முறையாக பணியை செய்யாததைப் போன்றதே. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக அரசுப் பள்ளிகளை உருவாக்க முடியாத நிலையே உள்ளது. ஆசிரியர் சமூகம் பெரும்பாலும் அவர்களின் தேவைகளிலும், உரிமையிலுமே கவனம் செலுத்துகிறது. இந்த மனுவைப் பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல.

இதையும் படிக்க | JEE தேர்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் மாவட்டந்தோறும் சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்த குழு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது, பகுதி நேர வேலைகளில் ஈடுபடுவது, டியூஷன் சென்டர் வைத்திருப்பது, வீடுகளில் டியூஷன் நடத்துவது போன்ற தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள் குறித்து புகார் அளிக்க வசதியாக தொலைபேசி, செல்போன், வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் உள்ளிட்டவை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றில் தயக்கம், ஆர்வம் இல்லாமல் இருக்கும் ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள பதிவு செய்துள்ள, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆசிரியர் கூட்டமைப்புகளின் நடவடிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். இவற்றின் நடவடிக்கைகள் விதிகளை மீறியோ, சட்டத்திற்கு புறம்பாகவோ இருப்பதாக தகவல்கள் மற்றும் புகார்கள் இருந்தால் அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப். 4க்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot