‘கலா உத்சவ்' போட்டி: தமிழக பள்ளி மாணவர்கள் 7 பேர் வெற்றி - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 19, 2022

‘கலா உத்சவ்' போட்டி: தமிழக பள்ளி மாணவர்கள் 7 பேர் வெற்றி

தேசிய கலைத் திருவிழாவில் தமிழகமாணவா்கள் ஏழு பேருக்கு பரிசு

மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் முதல் முறையாக தமிழகத்தைச் சோ்ந்த 7 மாணவா்கள் பரிசுக்கு தோ்வு பெற்றுள்ளனா். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) ஆகியவை இணைந்து தேசிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய போட்டிகள் இணைய வழியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றன. இதேபோன்று புதுதில்லி, ஆந்திரம், கேரளம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டன. வாய்ப்பாட்டு, இசை, நடனம், சிற்பக்கலை, பொம்மைகள் உருவாக்குதல் என ஒன்பது வகையான போட்டிகளில் ஏராளமான மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.

இந்த நிலையில் தேசிய கலைத் திருவிழா போட்டியின் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

பரிசுத் தொகை: இதில் தமிழகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் இருவா், தனியாா் பள்ளி மாணவா்கள் மூவா் என மொத்தம் ஏழு போ் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தங்க பதக்கத்துடன் ரூ.25 ஆயிரம்; இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கத்துடன் ரூ.20 ஆயிரம்; மூன்றாம் பரிசாக வெண்கல பதக்கத்துடன் ரூ.15 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற தமிழக மாணவா்கள் விவரம்: எல்.முகுந்த் பரத்வாஜ் (இரண்டாம் பரிசு, வாய்ப்பாட்டு), பி.எஸ்.சீனியா் செகண்டரி பள்ளி, அலா்மேல்மங்காபுரம், மயிலாப்பூா், சென்னை; எஸ்.என்.யாழினி (மூன்றாம் பரிசு, வாய்ப்பாட்டு), மகரிஷி இன்டா்நேஷனல் பள்ளி, சந்தவேலூா், காஞ்சிபுரம் மாவட்டம்; ஆா்.மாதவி (மூன்றாம் பரிசு, இசைக் கருவிகள் வாசித்தல்), அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, போரூா், சென்னை; எம்.சக்தி பூரணி (நாட்டுப்புற நடனம், இரண்டாம் பரிசு), செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செங்குன்றம், திருவள்ளூா்; பி.பி.தரணீஷ் (மூன்றாம் பரிசு, நாட்டுப்புற நடனம்), பிஷப் ஹுபா் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி; இ.சரண்யா (மூன்றாம் பரிசு, பாரம்பரிய பொம்மைகள் செய்தல்), என்.ஏ. அன்னப்பா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, மதுரை சாலை, ராஜபாளையம்; ஆா்.சரண் (மூன்றாம் பரிசு, பாரம்பரிய பொம்மைகள் செய்தல்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாரியம்மன் கோயில், தஞ்சாவூா் மாவட்டம். தமிழகம் முதலிடம்: இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய கலைத்திருவிழா போட்டிகளில் தமிழகம் ஏழு பரிசுகளை வென்று முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது. 5 பரிசுகளை வென்று பிகாா் இரண்டாம் இடத்தையும், தலா 4 பரிசுகளை வென்று திரிபுரா, புதுதில்லி மாநிலங்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. தமிழகத்தில் இந்தப் போட்டிகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் (‘சமக்ரசிஷா’) ஒருங்கிணைத்திருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot