மருத்துவர்கள் மேல்படிப்பிற்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, March 19, 2022

மருத்துவர்கள் மேல்படிப்பிற்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க | தமிழக அரசு சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்டம், தண்டலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கான 5 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்தது. இதை எதிர்த்து அருண்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட தலைநகரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனுதாரர் பணியாற்றியதால் அவருக்கு ஊக்க மதிப்பெண் சலுகையை வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் அருண்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பணியாற்றிய இடம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளதால் கிராமப்புறங்களில் பணியாற்றியோருக்கான ஊக்க மதிப்பெண்ணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிக்க | தமிழக அரசின் பட்ஜெட் மக்களின் மனசாட்சி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்காக கிராமப்புறம், மலைப்பகுதி, தொலைதூர பகுதிகளை வரையறுத்த நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, மனுதாரருக்கு ஊக்கமதிப்பெண் பெற தகுதியில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்கவே, மேற்படிப்புகளில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதே தவிர, நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அல்ல. அப்படி ஊக்க மதிப்பெண்கள் வழங்கினால், அது ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் நோக்கத்தையே வீழ்த்தி விடும். நகரங்களில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஊக்க மதிப்பெண் பெற உரிமை உள்ளது. நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot