அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத் தொகை வழங்க உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 23, 2022

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத் தொகை வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகையை வழங்க தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் ஆவணங்கள் மற்றும் வருவாயை ஆய்வு செய்த பிறகே மானியத் தொகையை வழங்க வேண்டும் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசின் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும். அதற்கான ஆய்வுப் பணிகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நான்கு வகைச் சான்றிதழ்களையும் நிகழாண்டு வரை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்த இடங்களில்தான் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா, கைத்தொழில் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களின் நியமனம் மாணவா்களுக்கு உபயோகமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு பெற்றிருந்தால் ஐந்து ஆண்டு பணி முன் அனுபவம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிக்காக வழங்கப்பட்ட சொத்துகளின் வருவாயையும் பராமரிப்பு மானியம் வழங்கும் முன் கணக்கிட வேண்டும். இவற்றை ஆய்வு செய்து சரியாக இருந்தால் மட்டும் பள்ளிகளுக்கான நிதியுதவியை விடுவிக்க வேண்டும். சுயநிதிப் பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது. ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கியிருப்பின், மறு நியமன ஊதியம் குறித்து, மாநிலக் கணக்காயரால் அனுமதி ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளுக்கான மானியத் தொகையை மாா்ச் 4 -ஆம் தேதிக்குள்ளாக வழங்கி, மாா்ச் மாதம் 15- ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot