எதை கற்பது? எப்படி தேர்ந்தெடுப்பது? - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, January 20, 2022

எதை கற்பது? எப்படி தேர்ந்தெடுப்பது?

எதை கற்பது? எப்படி தேர்ந்தெடுப்பது?

எதிர்காலத்தில் உயர்கல்வியைப் பெறுவதற்கு கல்வி நிறுவனம் அல்லது படிப்பை தேடும்போது கவனிக்க வேண்டியவை எவை?

வேலைவாய்ப்பு, கல்விக்கட்டணம், உள்கட்டமைப்பு, கற்பித்தல் தரம் ஆகியவையா? இவை அனைத்தும் பெற்றோர் அல்லது மாணவருக்கு முக்கியம் தான். அறிவு பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) முன்னேறிக் கொண்டிருக்கும்போது, ஆராய்ச்சி எண்ணம் மற்றும் புதுமையான நோக்கு தான் முக்கியமானதாகும்.

தரவரிசைப் பட்டியலில் கல்வி நிறுவனம் பெற்றிருக்கும் இடம், அங்கீகாரம் ஆகியவை மதிப்பீடுகள் மட்டுமே. கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சித்திறன் தான் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சமாகும். கல்வி முதலீடுகள்: தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால திறன்களில் ஆராய்ச்சி எண்ணம் மற்றும் புதுமையான நோக்கு கல்வி முதலீடுகளாக கருதப்படுகின்றன.

மாணவர்களிடையே புதிய திறன்களை கட்டமைக்க இவை உதவும் என்பதால்,ஆராய்ச்சி எண்ணம் மற்றும் புதுமையான நோக்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

எந்தவகை ஆராய்ச்சியாக இருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம்-புதியன கண்டுபிடிப்பதாகும். அப்படியானால், கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக் கூடங்களாக இருந்தால் அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

பொருளாதார வளர்ச்சியும் அதற்கு உகந்த தொழில்நுட்பமும் நாட்டின் வெற்றிக்கும் அடித்தளமாக அமையும் என்பதால் கல்வியைத் தேர்வு செய்வதில் இதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.ஒரு கல்விநிறுவனத்தில் சேர முடிவெடுப்பதற்கு தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பு அடிப்படை காரணமாக அமைவது அவசியம்.

தகவல் திறனாய்வு: தொழில்நுட்பம், வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பேரிடர், அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒவ்வொரு நிமிடமும் குவியும் தகவல்களின் சமுத்திரத்தில் நாம் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கல்வி சார்ந்த தகவல்களும் குவிந்தவண்ணம் உள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மிடம் குவியும் எல்லாத் தகவல்களையும் உள்வாங்கிக் கொள்வது எளிதானதல்ல.

வழக்கமான கற்றல் முறையில், தகவல்களை மனனம் செய்யும் போக்கு காணப்பட்டது. அது காலாவதியாகிவிட்டதால், தகவல்களின் உண்மையான நோக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

சிக்கல்களை கண்டறிதல், தகவல் திறனாய்தல் உள்ளிட்டவற்றுடன் தீர்வுக்கான அணுகுமுறைகளை வகுப்பது முக்கியமாகும். ஆராய்ச்சி எண்ணம் கொண்ட மாணவரால் மட்டுமே தகவல்களை தொகுத்து பகுத்தாராய்ந்து தீர்வை நோக்கி நகரமுடியும்.

எதிர்காலத் திறன்கள்: குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களால் சூழப்பட்ட இடத்தில் கல்வி பெறும்போது எதிர்கால திறன்களை கற்கும் வாய்ப்பு இரட்டிப்பாகும்.

வழக்கமான கல்விமுறையில் காணப்படும் கற்றல், அது சார்ந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு தற்போது மதிப்பு கிடைப்பதில்லை. வகுப்பறைகளை காட்டிலும் கல்வி நிறுவனங்களின் தாழ்வாரங்களில் நிபுணர்களோடு நடைபெறும் உரையாடல்கள், வளாகங்களில் அடிக்கடி நடைபெறும் உரைவீச்சுகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் அதிகம் கற்க முடியும்.

சிக்கலும் தீர்வும்: கல்வியில் புதுமையான கற்கும்முறை இருந்துவிட்டால், தேடுதல் மனப்பான்மை, ஆராய்ச்சி நோக்கு போன்ற எல்லாக் கூறுகளையும் பயன்படுத்தி ஆசிரியர்களும் மாணவர்களும் புதியனவற்றைக் கண்டறிவார்கள். புத்தாக்கமும், ஆராய்ச்சி நோக்கும் வாய்த்துவிட்டால் புதிய சிந்தனையும் படைப்பாற்றலும் தனது சிறகுகளை விரித்து, சிக்கல்களைக் கண்டறிந்து, தீர்வை வகுக்கும் திறனை மாணவர்களிடையே உண்டாக்கும். அப்படிப்பட்ட சூழல் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவது முக்கியமாகும். ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான், தனது அறிவை நேரிடையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.மாணவர்கள், வலுவான தகவல் தொடர்புத்திறன் மற்றும் குழுமனப்பான்மையை இத்தகைய கல்லூரிகளில் கற்க முடியும்.

வழக்கமாக ஒரு கல்வி நிறுவனம், மாணவர்களுக்கு இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகள் அல்லது பட்டயப்படிப்புகளை வழங்கும். இதுவரை கண்டறியாத வேலை அல்லது பணி மற்றும் இதுவரை கண்டுபிடிக்காத தொழில்நுட்பத்திற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பது தான் தற்போது கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்ஆகும்.

இன்றைய கல்விச்சூழலில், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திறன்கள் கற்றலின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இந்த மாற்றத்தை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லாக் கல்விக்கூடங்களிலும் காணமுடியும். அப்படிப்பட்ட கல்விக்கூடங்களை கண்டறிந்து கல்வி பெறுவது, நாட்டுக்கு மட்டுமன்றி தனிப்பட்டமுறையிலான எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot