இறந்த ஆசிரியருக்கு அழைப்பு - தடுப்பூசி முகாமில் பரபரப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 22, 2022

இறந்த ஆசிரியருக்கு அழைப்பு - தடுப்பூசி முகாமில் பரபரப்பு

தடுப்பூசி முகாமில் பங்கேற்க இறந்த ஆசிரியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் திருவட்டாரில் பரபரப்பு ஏற்பட்டது. முகாமில் பங்கேற்க...

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் 528 இடங்களில் நடந்தது. இந்த முகாமில் பொறுப்பாளர்களாக பணியில் இருக்க வேண்டிய அலுவலர் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மூலமாக தயாரிக்கப்பட்டு அரசு பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்படுகிறது. அந்த பட்டியலில் பெயர் இருப்பவர்கள் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் முகாமிற்கு பணிக்கு செல்ல வேண்டும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இறந்த ஆசிரியருக்கு அழைப்பு

இந்தநிலையில் திருவட்டார் வட்டாரம் வேர்க்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முதலார் அரசு நடுநிலைப்பள்ளியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தவர் பெயரை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தவர், பணியில் இருந்த போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி இறந்து விட்டார். அந்த ஆசிரியர் முகாமில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விசாரணை

நேற்று காலையில் தடுப்பூசி முகாம் தொடங்கிய போது சுகாதாரத்துறை பணியாட்கள் முகாமிற்கு வந்தனர். அப்போது பணியில் இருக்க வேண்டிய ஆசிரியர் இல்லாததை விசாரித்த போது, அவர் இறந்துபோனது தெரிய வந்தது. பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஊழியர் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும், இதுபோன்ற தவறு யாருடைய கவனக்குறைவால் நடந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆசிரியரை தடுப்பூசி முகாமில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot