மருத்துவ படிப்புகள்: பொது பிரிவினருக்கு நாளை முதல் 7ம் தேதி வரை கவுன்சிலிங் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 29, 2022

மருத்துவ படிப்புகள்: பொது பிரிவினருக்கு நாளை முதல் 7ம் தேதி வரை கவுன்சிலிங்

''மருத்துவ படிப்புகளில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நாளை துவங்கி, பிப்., 7 வரை நடைபெறும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில், 2021 - 22ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய கவுன்சிலிங்கில், சிறப்பு பிரிவில் 73 பேர் இடங்கள் பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், சென்னை ஓமந்துாரர் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. முதல் நாள் கவுன்சிலிங்கிற்கு, 761 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அதில், 541 மாணவர்கள் மருத்துவம் படிப்பிற்கான இடங்களை பெற்றனர். அவர்களில், சிவா, பிரகாஷ், சந்தானம், வெங்கடேஸ்வரி உள்ளிட்ட முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், இடஒதுக்கீடு ஆணையை வழங்கி பாராட்டினார்.

பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:அரசு பள்ளி மாணவர்களுக்கு 437 எம்.பி.பி.எஸ்., - 107 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். நாளை முதல் பிப்ரவரி 7வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஆன்லைனில் நடைபெற உள்ளது.இடங்கள் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், பிப்ரவரி 8 முதல் மூன்று நாட்கள், அருகில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லுாரிகள், இரண்டு பல் மருத்துவ கல்லுாரிகளில், தங்களது சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். இறுதி ஒதுக்கீடு ஆணை 11 அல்லது 12ல் அறிவிக்கப்படும். ஒருமுறை இடங்களை தேர்வு செய்தால் நேரடியாக மாற்றப்படாது. இரண்டாவது கவுன்சிலிங்கின்போது, காலியிடங்களுக்கு ஏற்ப, தரவரிசை பட்டியல் அடிப்படையில், விரும்பிய கல்லுாரிகளில் இடம் வழங்கப்படும். முதல் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்கள், இரண்டாவது கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பினால் பதிவு செய்ய வேண்டும். அப்போது, காலியாக இருக்கும் இடங்களில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் வசந்தாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

'தினமலர்' செய்தியால்52 பேருக்கு பயன்

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில் இடம் பெறாமல், அரசு ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதனால், மருத்துவ படிப்புகளில் அவர்களால் சேர முடியாத நிலை ஏற்பட இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், பள்ளிகளில் பெற்ற 'போனபைடு' சான்றிதழுடன், மருத்துவ கல்வி இயக்ககத்தை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டில் இருந்த 152 மாணவர்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம் பெற்றனர்; பெரும்பாலானோர் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றனர். 'டேப்லெட்' இலவசம்!

அரசின் பள்ளிகளில் படித்து, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெறும் மாணவர்களுக்கு, படிக்கும் வரை கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். உணவு, உடை, தங்கும் விடுதி போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், 'டேப்லெட்' கம்ப்யூட்டர் கருவி வழங்கப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு 'டேப்லெட்' வழங்குவார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவியர் இசக்கியம்மாள், யாமினி, பிரியா மூவரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர்.

மதுரை ஈ.வெ.ரா., மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் படித்த ராதிகா, நான்சி இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒரே மாதிரியான ஆடையில் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தனர். இதில், ராதிகாவிற்கு மதுரை; நான்சிக்கு திருநெல்வேலி கல்லுாரியில் இடம் கிடைத்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot