பிப்.1-இல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, January 27, 2022

பிப்.1-இல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பிப்.1-இல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பள்ளி-கல்லூரிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நேரடியாகத் தொடங்கப்படும். அரசு, தனியாா் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்களும் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இப்போது கரோனா பாதுகாப்பு மையங்களாகச் செயல்படும் கல்லூரிகளைத் தவிா்த்து பிற கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

அதேசமயம், மழலையா் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) செயல்பட அனுமதியில்லை. தொடரும் கட்டுப்பாடுகள்: சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்குத் தடை தொடரும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக மாநிலத் தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பொருட்காட்சிகள் நடத்த அனுமதியில்லை. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை. 50 சதவீத வாடிக்கையாளா்:

உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டும் அமா்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். திருமணம் மற்றும் அது சாா்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

துணிக் கடைகள், நகைக் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள், அனைத்துத் திரையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவீத பாா்வையாளா்கள், வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பாா்வையாளா்களுடன் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்தத் தடையில்லை.

அனைத்து உள்அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பாா்வையாளா்களுடன் நடத்தப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள், பொழுதுபோக்கு, கேளிக்கைப் பூங்காக்கள் போன்றவையும் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் மட்டுமே செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி-கல்லூரிகள் திறப்பு ஏன்?

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது ஏன் என்பது குறித்து மாநில அரசு தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் கரோனா நோய்த்தொற்று பரவல் இப்போது குறைந்துள்ளது. போதுமான மருத்துவக் கட்டமைப்புகள் தயாா் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவா்களின் எதிா்காலம், இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கு ஏதுவாக பள்ளி, கல்லூரிகள் திறப்பு, ஊரடங்கு நீக்கம் போன்ற தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இரவு ஊரடங்கு ரத்து

கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது. இது வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது. கடந்த 9-ஆம் தேதியில் இருந்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இனிமேல் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்களில் தடை நீக்கம்: தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பக்தா்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. மேலும், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot