படிக்கும் கண்ணாடிக்குப் பதில் சொட்டு மருந்து! - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

படிக்கும் கண்ணாடிக்குப் பதில் சொட்டு மருந்து!

வயதாவதால், கிட்டத்தில் உள்ளவை தெளிவாகத் தெரியாமல் போகும் கண் குறைபாடு ஏற்படலாம். 'பிரெஸ்பியோபியா' எனப்படும் இந்தக் குறைபாட்டை சரிக்கட்ட, படிப்பதற்கான கண்ணாடியை பலரும் அணிவர். இப்படி அணிவோரின் எண்ணிக்கை பல கோடிப்பேரைத் தாண்டும். இந்தக் குறையைப் போக்க கண்ணாடி அணிவதற்குப் பதில், சொட்டு மருந்து ஒன்றை, அமெரிக்காவிலுள்ள 'அலெர்கான்' நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்ணில் இயற்கையாகவே இருக்கும் லென்ஸ், மிகவும் வளைந்துகொடுக்கும் தன்மைகொண்டது. இதனால்தான், நொடிப்பொழுதில், கண்ணின் கருவிழிகள் குவியப் புலத்தை மாற்றில், அருகே அல்லது துாரக் காட்சிகளை துல்லியமாக பார்க்க உதவுகின்றன. ஆனால், வயது ஆக ஆக, இயற்கையான லென்சுக்கு கடினத் தன்மை வரத் துவங்குகிறது. இதனால், கண்ணுக்குள் உள்ள தசைகள் எவ்வளவு முயன்றாலும், பார்வைக் குவியத்தை முன்போல சுருக்கி விரிக்க முடியாமல் போய்விடுகிறது. இந்தக் குறையைப் போக்கத்தான் 'ரீடிங் கிளாஸ்' உதவுகிறது. இப்போது அலெர்கான் வெளியிட்டுள்ள வுயிட்டி (Vuity) என்ற சொட்டு மருந்து, கண்ணின் தசைகளையும் லென்சையும் இளக்கமடையச் செய்து, பார்வைக் குவியத்தை மேம்படுத்துகிறது. இதனால், வுயிட்டி மருந்தை நேரடியாக கண்களில் போட்டுக் கொள்வோருக்கு படிக்கும் கண்ணாடி அணியாமலேயே பொடி எழுத்துக்களைப் படிக்க முடியும். அருகாமையிலுள்ள நபர்கள், பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால், இந்த சொட்டு மருந்தை, தினமும் போட்டுக்கொள்ள வேண்டும். பெரும்பாலானோருக்கு, காலையில் போட்டுக்கொண்டால், இரவு வரை பார்வை துல்லியம் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இப்போது, வுயிட்டி சொட்டு மருந்துக்கு அமெரிக்க அரசு விற்பனை அனுமதி கொடுத்துள்ளது. இந்த மருந்தால், நுாற்றில் 5 சதவீதம் பேருக்கு லேசான தலைவலியும், கண் சிவப்பதும் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மற்றபடி, பெரும்பாலானோருக்கு படிக்கும் கண்ணாடிக்கு குட்பை சொல்ல வுயிட்டி உதவும் என்று தெரிகிறது. வுயிட்டியின் தயாரிப்பாளரான 'அலெர்கான்' இம்மருந்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிட்டத்தில் உள்ளவற்றை தெளிவாகப் பார்க்க உதவும் இந்த மருந்து, துாரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதேபோல, இந்த மருந்தை 65 வயதுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடாது என்றும், இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவது அல்லது ஆபத்தான கருவிகளைக் கையாள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அலெர்கான் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot