ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பாளிகள் அல்ல! - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 10, 2021

ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பாளிகள் அல்ல!

'ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் வேண்டும். என்றைக்கு ஆசிரியர்கள் பிரம்பை எடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து மாணவர்களின் ஒழுக்கம் குறைந்துவிட்டது.

அடியாத மாடு பணியாது' எனும் ஆதங்கம் மீண்டும் மீண்டும் சமூகத்தால் முன்வைக்கப்படுகிறது. திருட்டு, போதை, அடிதடிச் செய்திகளில் இடம்பெற்ற சிறுவர்கள் பிறரைக் கொல்லவும், ஆசிரியரைத் தாக்கவும் துணியும் சூழலில் இக்குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கிறது.

வெளிநாடுகளில் நான் பார்த்தவரையில் பணம் செலுத்திப் பள்ளிக்கு வரும் மாணவர்களை, ஆசிரியர்-மாணவர் என்கிற நிலையிலேயே அணுகுகிறார்கள். 'நன்றி அம்மா' என்று சொன்ன மாணவரைப் பார்த்து, 'நான் உன் அம்மா அல்ல... ஆசிரியர்' என்று பதிலுரைத்த ஆசிரியர் உண்டு. மாணவர்களுக்காக அவர்கள் சிறப்பாகப் பாடங்களைத் தயாரிக்கிறார்கள். கற்றுக்கொள்ள உதவுகிறார்கள். அறிவை விசாலப்படுத்துகிறார்கள். மாணவர், தொடர்ந்து வீட்டுப் பாடங்களைச் செய்யாவிட்டாலோ, பள்ளிக்கு வராமல் இருந்தாலோ, ஒழுங்கீனமாக நடந்துகொண்டாலோ 'என்ன நடந்தது?' என ஆசிரியர்கள் கேட்பார்கள். அவ்வளவுதான். பெற்றோருக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் தகவல் சொல்லுவார். பள்ளி ஒழுங்கை மாணவர் மீறியிருந்தால் நிர்வாகரீதியிலான நடவடிக்கை எடுப்பார்கள். ஆசிரியருக்கும் நிர்வாகத்துக்கும் எவ்வித மனஉளைச்சலும் இல்லை. தமிழ்நாட்டில், ஆசிரியர்-மாணவர், நிர்வாகம்-மாணவர் என்பதற்கு இடையே அக்கறை-மாணவர் என்னும் ஒன்றை ஆசிரியர்கள் இயல்பாகவே சுமக்கிறார்கள். அதனால், மாணவர்கள் வராதபோது விசாரிக்கிறார்கள், பக்கம் பக்கமாக அறிவுரை சொல்கிறார்கள், அதட்டுகிறார்கள். கோபம் வருகிறது, வார்த்தை தடிக்கிறது, சிலர் அடிக்கிறார்கள். மாணவர்கள் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் நிர்வாகரீதியாக நடவடிக்கை எடுக்கிற ஆசிரியர்கள், நிர்வாகிகள் உண்டு. ஆனால், சிபாரிசு அந்த இடத்தில் நுழைகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் விளக்குகளை உடைப்பது, திருடுவது, தங்களுக்குள் அடித்துக்கொள்வது எனப் பல்வேறு தவறுகள் செய்தார்கள்.

நிர்வாகத்தினர் தனியாகப் பேசினார்கள். பெற்றோர்களிடம் பேசினார்கள். அந்த மாணவர்கள் திருந்தவில்லை, ஒருநாள் பள்ளிச் சுற்றுச்சுவரை மாணவர்கள் உடைத்தார்கள். நிர்வாகம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க முடிவெடுத்தது. அப்போது, ஊர்ப் பெரியவர்கள் 'மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்' என்றார்கள். பள்ளி நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆண்டு முழுவதும் ஆசிரியர்களும் நிர்வாகமும் அடைந்த மனஉளைச்சல் சொல்லி மாளாது.

அப்போதும், இப்போதும் 'ஆசிரியர்களுக்கு அடிக்கச் சுதந்திரம் கொடுங்கள்' எனும் புலம்பல் ஆங்காங்கே கேட்கிறது. இங்கே ஓர் அடிப்படையான கேள்வி எழுகிறது. அதென்ன ஆசிரியர்களை மட்டும் எதிர்க் கூண்டில் நிறுத்திவிட்டு, நாம் அனைவரும் மறுபக்கமாக நிற்பது. 'கம்பெடுத்து அடியுங்கள்' என்கிறோமே ஏன், மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? பெற்றோருக்கு இல்லையா? சமூகத்துக்கு இல்லையா? திரைத் துறையினருக்கு இல்லையா? மனிதரின் நடத்தை மற்றும் ஆளுமை வளர்ச்சியில் அதிமுக்கியமானது சிறார் பருவமும் பதின் பருவமும். சிறுவர்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் நடப்பவற்றிலிருந்தும் முன்மாதிரிகளைப் பிரதி எடுக்கிறார்கள். பதின்பருவத்தில் தங்களுக்கான அடையாளத்தைத் தேடவும், கண்டடையவும் முயற்சி செய்கிறார்கள். அடையாளத் தேடுதலில், சமூகத்துடனான அவர்களது உறவாடல், உரையாடல், நம்பிக்கை, மதிப்பீடுகள், உறவு அனைத்தையும் பலவாறு மாற்ற முயற்சிக்கிறார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் வழக்கமான அறிவுரைகளைவிட சக மாணவரின் பார்வைதான் அவர்களுக்கு முக்கியமாகிறது.

அதேபோல, பதின் பருவத்து மூளையில் கார்பஸ் கலோசம், பிரிஃபிரன்டல் கார்டெக்ஸ், அமிக்டலா ஆகிய மூன்றிலும் முக்கியமான மாற்றம் நடக்கிறது. கிடைக்கிற தகவல்களை அலசி ஆராயும் பணியைச் செய்யும் கார்பஸ் கலோசம், உடனடி எதிர்வினை மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும், உணர்வுகளின் இருக்கையான அமிக்டலா இரண்டும் பதின் பருவத்தில் விரைவாக வளருகின்றன. ஆனால், ஒரு செயல் சரியா தவறா என முடிவெடுக்க உதவும் பிரிஃபிரன்டல் கார்டெக்ஸ் 20 வயதில்தான் ஒவ்வொருவருக்கும் முழுமையாக வளர்ச்சியடைகிறது.

ஆக, தான் செய்வது, பேசுவது சரியா தவறா என்று தெரிவதற்கு முன்பாகவே பதின்பருவத்தினர் ஒரு செயலைச் செய்துவிடுகிறார்கள். எனவே, சரியான முன்மாதிரியை நாம் கொடுத்தால்தான், மாணவர்கள் விடலைப் பருவத்தில் தன்னம்பிக்கையோடு புதியதை முயன்று பார்ப்பார்கள். தவறான பாதையில் செல்கிறவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். சரியான முன்மாதிரியை நாம் கொடுக்கிறோமா? ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பெற்றோர், 5-ம், 7-ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் சே வெளிநாட்டுத் திரைப்படங்களில் குழந்தைகள் வரும் காட்சிகளை மிகவும் கவனமாகக் காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால் நம் நாட்டில் காதல், கர்ப்பம், களவு, போதை, கொலை, பாலியல் வன்முறை, மது, அடிதடி, ஆசிரியர்களை மிகக் கேவலமாகக் கேலி செய்வது, ஆசிரியருக்குக் காதல் கடிதம் கொண்டுசெல்வது, ஆசிரியைகளையும் மாணவிகளையும் இடிப்பது, வகுப்பறையிலேயே குடிப்பது போன்ற ஏதாவது ஒன்று அல்லது பலவற்றை 18 வயதுக்குக் கீழுள்ள சிறுவர்கள் செய்வதுபோலப் பல திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. திரைப்படங்கள் அதிகம் தாக்கம் செலுத்தும் நம் கலாச்சாரத்தில், மாணவர்களையும் சிறுவர்களையும் மேற்குறிப்பிட்ட காட்சிகளின் பிம்பங்களாகவே காட்டுவது, அவர்கள் மத்தியில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்று இயக்குநர்களுக்குத் தெரியாதா? தாங்கள் எதைப் பார்க்கிறார்களோ அதையே மாணவர்கள் செய்துபார்க்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது, அதை ஆசிரியர்களே பெரும்பாலும் முதலில் எதிர்கொள்கிறார்கள். அறமற்ற வாழ்வைக் காட்டி, சமூகமாகத் தோற்ற பிறகு 'நல்வழிப்படுத்துவது ஆசிரியரின் பொறுப்புதான், பள்ளியில்தானே அதிக நேரம் இருக்கிறார்கள்' என்பது எவ்வகையில் நியாயம். ஆங்காங்கே குறைகள் இருப்பினும், ஆசிரியர்கள் அக்கறை எனும் விழுமியத்துடன் மாணவர்களை அணுகுவதால்தான் எண்ணற்றவர்களால் படிப்பைத் தொடர முடிகிறது. ஆசிரியர்கள், நிர்வாக அணுகுமுறையை முன்னிலைப்படுத்தத் தொடங்கினால் ஆபத்து சமூகத்துக்குத்தான். ஆகவே, ஆசிரியர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள். - சூ.ம.ஜெயசீலன், 'இது நம் குழந்தைகளின் வகுப்பறை' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

1 comment:

  1. S,it's my worries actually when the government support the teachers,then only the students will develop in their life.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot