பிளஸ் 1 பொது தேர்வு இந்தாண்டு ரத்து? - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 2, 2022

பிளஸ் 1 பொது தேர்வு இந்தாண்டு ரத்து?

பிளஸ் 1 பொது தேர்வு இந்தாண்டு ரத்து? கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!



பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளதால் பிளஸ் 1 பொது தேர்வை இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.1 முதல் டிச.23 வரை நேரடி வகுப்புகள் வழியே மூன்றரை மாதங்கள் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. பின் டிச. 23 முதல் ஜன.31 வரை விடுமுறை விடப்பட்டது.இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பல பள்ளிகளில் மாணவர்களை பல குழுக்களாக பிரித்து அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்தி வருகின்றன. 3 ஆண்டுகளாக தேர்வில்லை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கு குறைவாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே தற்போதைய சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட முக்கிய பாடங்களை முடிக்கவே குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவை.

இந்நிலையில் பிளஸ் 2வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதால் அரசு பள்ளிகளின் பிளஸ் 1 மாணவர்களுக்கு பெரும்பாலான பாடங்கள் இன்னும் நடத்தப்படவில்லை. பள்ளி கல்வி துறை வெளியிட்ட பாட திட்ட கால அட்டவணையிலும் பிளஸ் 1 'போர்ஷன்'இடம் பெறவில்லை. மேலும் 10ம் வகுப்பு பிளஸ் 2 போல பிளஸ் 1 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளும் அறிவிக்கப் படவில்லை.

தற்போதைய பிளஸ் 1 மாணவர்கள் கடந்த ஆண்டும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் 'ஆல் பாஸ்' முறையில் தேர்ச்சி பெற்று வந்தனர். அதற்கு முன் 9ம் வகுப்புக்கும் அவர்கள் தேர்வு எழுதவில்லை. எனவே மூன்று ஆண்டுகளாக தேர்வுகளையே எழுதாமல் உள்ள பிளஸ் 1 மாணவர்களுக்கு திடீரென பொது தேர்வு நடத்தினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும்.இதனால் பல மாணவர்கள் பிளஸ் 1 வகுப்புடன் பள்ளி படிப்பில் இடைநிற்றல் ஆகவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் ஆலோசனை

இதை கருத்தில் வைத்து தற்போதைய பிளஸ் 1 மாணவர்களுக்கு நடப்பாண்டு மட்டும் பொதுத் தேர்வை ரத்து செய்து 'ஆல் பாஸ்' வழங்கலாமா அல்லது மாவட்ட அளவில் மதிப்பீட்டு தேர்வு மட்டும் நடத்தலாமா என பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். அதேநேரம் பிளஸ் 1 பாடத்தை சரியாக படிக்காமல் சென்றால் உயர்கல்வியில் திணறும் நிலை ஏற்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் தலைமை செயலகம் மற்றும் அரசு தேர்வு துறை வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டங்களில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.நிபுணர்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை பெறலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வர் பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் செயலக அதிகாரிகள் கூடி முடிவு செய்ய உள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot