வளாக நேர்காணல் முகாமில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 40% கூடுதலாக வேலைவாய்ப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 17, 2022

வளாக நேர்காணல் முகாமில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 40% கூடுதலாக வேலைவாய்ப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் அதிகளவு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த வளாக நேர்காணலுடன் ஒப்பிடுகையில் இது 40% கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையில் வளாக நேர்காணலை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டில் வளாக நேர்காணல் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்தநிலையில் நடப்பு ஆண்டிலும் ஆன்லைன் மூலம் வளாக நேர்காணலை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த வளாக நேர்காணலில் சிஸ்கோ, சாம்சங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வெல்ஸ் பார்கோ, சொசைட் ஜெனரல், பாங்க் ஆப் நியூயார்க் மெலன், வால்மார்ட் லேப்ஸ், போர்டு, ரிலையன்ஸ், ஹூண்டாய், ஆல்ஸ்டோம், ஓலா எலக்ட்ரிக், ராப்தி எனர்ஜி, டைகர் அனலிடிக்ஸ், குளோபல் அனலிடிக்ஸ், காட்டர்பில்லர் உள்பட பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு வளாக நேர்காணலில் இதுவரை 142 நிறுவனங்கள் பங்கேற்று, 1,700 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது மேலும் அதிகரித்து, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சராசரி ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 40 சதவீதம் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 120 நிறுவனங்களில் 1,100 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot