படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்; போலீஸ் ஸ்டேசனில் பஸ்சை நிறுத்திய டிரைவர் - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 14, 2021

படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்; போலீஸ் ஸ்டேசனில் பஸ்சை நிறுத்திய டிரைவர்

திருமங்கலம்: பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்களால் டிரைவர், பஸ்சை போலீஸ் ஸ்டேசனில் நிறுத்திய சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு டவுன் பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யகூடாது எனவும், அதனை மீறியும் பயணம் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதனால் டிரைவர், கண்டக்டர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே வரும் மாணவர்களை எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் செக்கானூரணி அருகேயுள்ள நடுமுதலைகுளத்திலிருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேற்று காலை டவுன் பஸ் சென்றது. பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடியே ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் பலமுறை மாணவர்களை படிக்கட்டினை விட்டு பஸ்சின் உள்ளே வரும்படி அழைத்தும் அவர்கள் வரவில்லை. பஸ் செக்கானூரணி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து கிளம்பிய பின்பும் மாணவர்களின் படிக்கட்டு பயணம் தொடரவே, ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் அருகேயுள்ள செக்கானூரணி போலீஸ் ஸ்டேசனில் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் கூட்டத்துடன் ஸ்டேசனுக்கு வந்த பஸ்சை கண்ட போலீசார் விசாரிக்கவே டிரைவர், கண்டக்டர் விவரம் கூறியுள்ளனர். போலீசாரை கண்டவுடன் மாணவர்கள் அடித்துபிடித்து பஸ்சினுள் சென்று விட்டனர். போலீசாரும் மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது என எச்சரிக்கை செய்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்பு பஸ் மீண்டும் மதுரைக்கு கிளம்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு அவனியாபுரம் அருகே பரம்புப்பட்டியில் இருந்து நேற்று காலை பெரியார் பஸ் நிலையம் நோக்கி வந்த பஸ்சில் வெள்ளக்கல் பஸ் நிறுத்தத்தில் ஏறிய மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு வந்தனர். இதுகுறித்து ஓட்டுநர் வடிவேல் மற்றும் நடத்துனர் குமார் ஆகியோர் அருகில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மாணவரை காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்று அம்மாணவனின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்து எழுதி வாங்கி அனுப்பினர். இச்செயலை பாராட்டி ஓட்டுனர், நடத்துனருக்கு சக பணியாளர்கள் பரிசு வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot