பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் - தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது கேள்விக்குறி? - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 14, 2021

பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் - தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது கேள்விக்குறி?

பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தாததால், அரசின் உத்தரவுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முற்பகல், பிற்பகல் என்றும்; ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்றும் வகுப்புகள் நடக்கின்றன.மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டும் வரலாம் என்றும், கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்கள் முழுமையாக நேரடி வகுப்புகளில் பங்கேற்காமல் உள்ளனர். இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளில் உடற்கல்வி செயல்பாடுகள், பிரார்த்தனை கூட்டங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிரார்த்தனை கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தினால் மட்டுமே, துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படும்.

இந்நிலையில், காலையில் பிரார்த்தனை கூட்டம் நடக்காததால், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் தினமும் பாடும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகி, ஒன்றரை ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் மறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் இசைக்கின்றன. தமிழ்த்தாய் வாழ்த்தை பதிவு செய்யப்பட்ட பாடலாக ஒலிபரப்பக் கூடாது என்றும், நேரடியாக பாட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல அரசு பள்ளிகளில் ஒலிபெருக்கி வசதியில்லாததால், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பதிவு செய்யப்பட்ட பாடலாக கூட ஒலிக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது.

'எனவே, முதல்வரும், பள்ளிக்கல்வி அமைச்சரும், இதுகுறித்து உரிய ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் குறைந்தபட்சம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot